ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும் எனக் கூறியுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி பெய்த அதிகனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. புயல் மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த கனமழை காரணமாக15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும், உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்காக டோக்கன்கள் கடந்த 14ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. டோக்கன் கிடைத்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் ரொக்கமாக ரூ.6000 வழங்கப்படும். டோக்கன்கள் கிடைக்கப்பெறாத மற்றும் குடும்ப அட்டை இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நியாய விலைக் கடைகளில், அதற்கு என உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களிலும் மொத்தமாக 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.1,486 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.
இந்நிலையில், சென்னை வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடையில், நேற்று காலை 10 மணிக்கு, மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண தொகையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதற்கிடையே மிக்ஜாம் புயல் நிவாரணம் குறித்த சந்தேகங்களை தீர்க்க சென்னை எழிலகத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நிவாரணத் தொகை குறித்த சந்தேகங்களை 044-2859 2828 மற்றும் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டு கேட்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தது பற்றி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் துவக்கி வைத்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு 1,486 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவர். மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும்!” எனத் தெரிவித்துள்ளார்.