மழையால் மிதக்கும் தென் மாவட்டங்கள்: வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் ரத்து!

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை -நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

வட மாவட்டங்களை பதம் பார்த்த வடகிழக்கு பருவமழை தற்போது தென் மாவட்டங்களை சூறையாடி வருகிறது. அங்குள்ள அருவிகள், ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் உள்ள குளங்கள் ஏற்கனவே நிரம்பியிருந்த நிலையில் தற்போது பெய்த தொடர் மழையால், குளங்கள் நிரம்பி வழிந்து வயல்களுக்குள் தண்ணீர் சென்றுள்ளது. இதனால் பல ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் நெல்லை மாவட்டத்தின் பாபநாசம், சேரன்மாதேவி, விகேபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் 24 மணி நேரத்தை தாண்டி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு நிமிடம் கூட நிற்காமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிகள் என எங்கும் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் குடியிருப்புக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதுவரை கண்டிராத மழையால் நெல்லை நகர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதேபோல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோர பகுதியில் வசித்து வருபவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின்சாரம் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது நெல்லை சென்னை வந்தே பாரத் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோல் திருச்செந்தூர் – பாலக்காடு, நெல்லை – ஜாம் நகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.