தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக குற்றாலம் பிரதான அருவி பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசியில் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. கடந்த சில நாட்களாக மழையின்றி பனிப்பொழிவு அதிகரித்தது. இந்நிலையில், குமரிக் கடலில் உருவான காற்று சுழற்சி காரணமாக கடந்த 16-ம் தேதி மழை பெய்யத் தொடங்கியது. முதல் நாளில் தென்காசி மாவட்டத்தில் லேசான மழை பெய்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை முதல் மழை தீவிரம் அடைந்தது. மாவட்டத்தின் பரவலான பகுதிகளில் இடைவிடாமல் மிதமான அளவில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் மக்கள் முடங்கினர். நேற்று காலை 9 மணிக்கு மேல் படிப்படியாக மழை ஓய்வு பெறத் தொடங்கியது.
அடவிநயினார் அணை தவிர மற்ற 4 அணைகளும் நிரம்பிவிட்டதால் அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது. கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 5460 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 1726 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 451 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 180 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஒடியது.
கனமழை காரணமாக கனமழையால் குற்றாலம் பிரதான அருவி பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன் சோங்கம் ஐடக் சிரு, மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.