ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு பதில் இனி மஞ்சள் பருப்பு: ஓபிஎஸ் கண்டனம்!

நியாய விலைக் கடைகள் மூலம் தரமான துவரம் பருப்பு வழங்குவதற்கு பதிலாக மஞ்சள் பருப்பை வாங்கி விநியோகிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நியாய விலைக் கடைகள் மூலம் கூடுதலாக உளுந்தம் பருப்பு வழங்கப்படும், சர்க்கரை வழங்கப்படும் என்றெல்லாம் தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளாக அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த திமுக, ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும், மேற்படி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக துவரம் பருப்பிற்கு பதிலாக தரமற்ற மஞ்சள் பருப்பை அதிக விலைக்கு வாங்கி வழங்க முயற்சித்து வருகிறது. இதன் மூலம் தங்கள் கருவூலத்தை நிரப்பும் முயற்சியில் திமுக இறங்கியிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் மாதம் ஒன்றிற்கு ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அறுபதாயிரம் டன் துவரம் பருப்பு அல்லது கன்டா மஞ்சள் பருப்பினை வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதாகவும், இதில் குறைந்த விலைப் புள்ளியாக ஒரு நிறுவனம் துவரம் பருப்பிற்கு 134.74 ரூபாய் கோரியதாகவும், மஞ்சள் பருப்பிற்கு 133.75 ரூபாய் கோரியதாகவும், ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளுக்கு முற்றிலும் மாறாக முந்தைய டெண்டரில் பங்கேற்று விநியோகம் செய்ய முடியாத நிறுவனம வேறு ஒரு நிறுவனத்தின் பெயரிரல் பங்கேற்றதாகவும், ஆளும் திமுகவிற்கு வேண்டிய நிறுவனத்திடமிருந்து மஞ்சள் பருப்பை வாங்க திமுக அரசு முடிவெடுத்துள்ளதாகவும், வெளிச்சந்தை மதிப்பான கிலோ 120 ரூபாயை காட்டிலும் கூடுதல் விலை கொடுத்து வாங்க இருப்பதாகவும் இன்று பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன. மேலும் ஒரு மாதத்திற்கு தேவையான ஒப்பந்தப்புள்ளி கோராமல் மூன்று மாதத்திற்கு தேவையான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அதனை அதிக விலை கொடுத்து வாங்கவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

தரமான துவரம் பருப்பு என்பது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்றும் மஞ்சள் பருப்பு என்பது 50 முதல் 95 கிலோ பருப்பினை கலவை இயந்திரத்தில் கொட்டி சிறிதாக தண்ணீர் ஊற்றி 100 கிலோ பருப்பாக மாற்றப்படுகிறது என்றும் சில நேரங்களில் செயற்கை நிறம் சேர்க்கப்படுகிறது என்றும், இந்தப் பருப்பினை மக்கள் விரும்புவது இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசுக்கு ஏற்படும் இழப்பினை கருத்தில் கொண்டு வெளிப்படையான முறையில் குறைந்த விலையில் தரமான துவரம் பருப்பினை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தரமற்ற மஞ்சள் பருப்பினை வாங்கி வழங்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.