“இண்டியா கூட்டணிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. பிரதமர் மோடியை அதிகாரத்தில் இருந்து இண்டியா கூட்டணி வெளியேற்றும்” என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமர் மோடியை முன்னிறுத்தி பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தலில் பாஜக மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் தெலங்கானாவில் மட்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனால், மக்களவைத் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே பாஜகவுக்கு எதிராக உருவாகியுள்ள இண்டியா கூட்டணி மக்களவைத் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், நாளை இண்டியா கூட்டணி கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டணிக்குள்ளும் சில பிளவுகள் இருப்பதாக பேசப்படுகிறது.
இந்த நிலையில், பிகார் மாநில முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவ் டெல்லி விமான நிலையத்துக்கு செல்வதற்காக மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது மோடி குறித்தும், மக்களவைத் தேர்தல் குறித்தும் லாலு பிரசாத் யாதவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், “இண்டியா கூட்டணிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. நாங்கள் வெற்றி பெறுவோம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வரப் போகிறார் என்று சொல்ல உங்களுக்கு ஏதோ ஒரே ஒரு விஷயம் இருக்கிறது. அப்படியென்றால் அது அப்படியே இருக்கட்டும். ஆனால், இண்டியா கூட்டணி அவரை அதிகாரத்திலிருந்து வெளியேற்றும்” என்று தெரிவித்துள்ளார்.