மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 92 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது, எங்களை கூண்டில் அடைக்க முடியாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் கைகளில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது சரியல்ல. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கருத்துகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்கள். பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரில் ஒருவர், டிசம்பர் 13-ம் தேதி நடந்த நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், இருவருமே அவைக்கு வர மறுக்கிறார்கள். நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது அவர்கள் வாரணாசியிலும், அகமதாபாத்திலும் உரைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.
“ஜனநாயகம் என்றால் என்ன என்று தெரியாத ஒரு கட்சி நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கான திட்டமிட்ட தாக்குதல் இது. ஹிட்லரை உதாரணமாகக் கொண்டு அவர்கள் செயல்படுகிறார்கள். மக்களவைக்குள் நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் வீசிய புகைக் குண்டுகள் விஷ வாயுக்களாக இருந்திருந்தால் அங்கு இருந்த உறுப்பினர்கள் அனைவரும் இறந்திருப்பார்கள். புதிய நாடாளுமன்றம் உச்சபட்ச பாதுகாப்பு கொண்டது என அவர்கள் கூறினார்கள். ஆனால், அதற்கு எதிராக நிலைமை உள்ளது” என காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திக் விஜய் சிங் குற்றம் சாட்டினார்.
இந்தச் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை அவர்கள் விரும்புகிறார்கள். இதை நோக்கியே அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே, டெல்லியில் பாஜக நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஜனநாயகம் மற்றும் ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறலை கண்டித்திருக்க வேண்டும். ஒரு சில கட்சிகள், ஒரு வகையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறலுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. இது ஆபத்தான ஒன்று. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்ததால் எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் இருக்கின்றன.
இந்த விரக்தியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சீர்குலைத்து அல்லது முடக்கி வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதோடு ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்றார். அதோடு, “நமது அரசை தூக்கி எறிவதே இண்டியா கூட்டணியின் குறிக்கோள். ஆனால் நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதே நமது அரசாங்கத்தின் குறிக்கோள்” எனத் தெரிவித்துள்ளார்.