தென் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
தென்மாவட்டங்களாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றன. சுமார் 8 அமைச்சர்கள் வரை 4 மாவட்டங்களிலும் முகாமிட்டு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகளும் களத்தில் இருந்து மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நாளை இரு மாவட்டங்களின் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை வெள்ளத்தின் சுவடுகள் மறைவதற்குள், கடந்த இரண்டு நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இந்த அதிகனமழை தென் தமிழக மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்றும், தென் தமிழகத்திற்கு செல்லும் பாதைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன என சேதத்தின் விவரங்கள், பாதிக்கப்பட்ட இடங்கள், மக்களின் நிலை குறித்து ஓபிஎஸ் விரிவாக பட்டியலிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, புயல் மற்றும் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், முதலமைச்சரான பிறகு அதைத் தவிர்ப்பது வேதனைக்குரிய செயலாகும் என்று கூறிய ஓபிஎஸ், இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் டெல்லி சென்றிருப்பது ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல் உள்ளது என்று விமர்சித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறாமல், இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்ற அவர், தென் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குழுவினை அமைத்து, மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கவும், பாதிப்பின் தன்மை மிக அதிகமாக இருப்பதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணமாக 25,000 ரூபாய் வழங்கவும், மறுவாழ்வுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தரவிட ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், யாரும் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை கடைபிடிக்குமாறும் அப்பகுதி மக்களுக்கு கேட்டுக்கொண்டுள்ள அவர், “கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் தான் தென் தமிழகத்திற்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.