ஜக்தீப் தன்கர் விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “இதற்கா முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?” என எதிர் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் முக்கிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரைப் போல் மிமிக்ரி செய்து நடித்து அவமதித்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ”யார் அவமதித்தார்கள்? அவமதித்ததாக எப்படி சொல்கிறீர்கள்? எம்.பி.க்கள் அங்கே அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களை வீடியோ எடுத்தேன். அந்த வீடியோ எனது மொபைலில் உள்ளது. நான் அதனை யாருக்கும் பகிரவில்லை.
அதேநேரத்தில், அந்த நிகழ்வை மீடியாவும் வீடியோ எடுத்தது. யாரும் யார் குறித்தும் எதுவும் சொல்லவில்லை. நாடாளுமன்றத்தில் இருந்து 150 எம்.பிக்களை தூக்கி வெளியே வீசி இருக்கிறார்கள். அது குறித்து ஊடகங்களில் எந்த விவாதமும் இல்லை. அதானி விவகாரம் குறித்தோ, ரஃபேல் விவகாரம் குறித்தோ, வேலைவாய்ப்பின்மை குறித்தோ எந்த விவாதமும் நடப்பதில்லை. எங்கள் எம்.பிக்கள் மனம் உடைந்து வெளியே அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், நீங்கள் மிமிக்ரி குறித்து விவாதித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என கூறினார்.