எம்.பி.க்கள் இடைநீக்கம் விவகாரம்: எதிர்க்கட்சியினர் ஊர்வலம்!

நாடாளுமன்றத்தில் இருந்து 143 எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற பதாகை ஏந்தி எதிர்க்கட்சியினர் இன்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து டெல்லியில் உள்ள விஜய் சவுக் வரை ஊர்வலமாக சென்றனர்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 13-ம் தேதி 2 பேர், பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து வண்ண புகை குப்பிகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல், மக்களவையில் இருந்து 97 எம்பிகள், மாநிலங்களவையில் இருந்து 46 எம்பிகள் என 143 பேர் மொத்தமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து மத்திய டெல்லியில் உள்ள விஜய் சவுக் வரை ‘ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்’ என்ற பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அப்போது எம்.பி.,க்கள் கைகளில் ‘எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இடைநீக்கம். இது ஜனநாயகத்தின் முடிவா?’ ‘நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் கூண்டோடு வெளியேற்றம்’ என்ற பதாகைகளையும் கைகளில் வைத்திருந்தனர்.

இந்த ஊர்வலத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “நாங்கள் நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து கேள்வி எழுப்ப விரும்புகிறோம். மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவரிடம் நாங்கள் தொடர்ந்து பாதுகாப்பு அத்துமீறல் குறித்து பேச அனுமதிக்குமாறு தொடர்ந்து கோரி வருகிறோம். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் பாதுகாப்பு அத்துமீறல் குறித்து அவையில் பேசியிருக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி வேறு இடங்களில் பேசுகிறார் மக்களவை,மாநிலங்களவையில் பேசவில்லை. இது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறிய செயல்” என்று தெரிவித்தார்.

எம்பிகளின் இடைநீக்கத்தைத் எதிர்த்து நாளை வெள்ளிக்கிழமை ஜந்தர்மந்தரிலும், நாடுதழுவிய அளவிலும் போராட்டம் நடத்த இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசின் செயல் ஜனநாயகத்தின் படுகொலை என்றும், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க நினைக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினர்.