பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று முன் தினம் சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இதையடுத்து இன்றைய தினம் அவருக்கும் அவருடைய மனைவி விசாலாட்சிக்குமான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. நீதிபதி ஜெயசந்திரன் தண்டனை வாசித்த போது, பொன்முடிக்கும், அவருடைய மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 50 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் அறிவித்திருந்தார். இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி எம்எல்ஏ, எம்பியாக பதவி வகிப்பவர்கள் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி தண்டனை அறிவித்தாலே அவருடைய பதவிக்கு இழப்பு ஏற்படும். அந்த வகையில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவருடைய எம்எல்ஏ பதவியும் அமைச்சர் பதவியும் பறிபோனது.
இதையடுத்து பொன்முடியின் தொகுதியான திருக்கோவிலூருக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் அவர் வசம் இருந்த உயர்கல்வித் துறை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. அந்த வகையில் பொன்முடி வகித்த உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் முதல்வரின் பரிந்துரையை ஏற்ற ஆளுநர், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித் துறையை வழங்கினார். அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலம், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.