கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மாநிலத்தின் அமைதியைக் கெடுக்க முயற்சிப்பதாகவும் அவரது வலையில் இம்மாநில மாணவர்கள் விழாமல் கட்டுப்பாடோடு இருந்ததாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், மாணவர் அமைப்புகளுக்கு எதிராக ஆளுநர் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தியுள்ளார், ஆனால் மாணவர்கள், அவரைப் போல் தங்கள் தரத்தைத் தாழ்த்திக்கொள்ளாமல் அமைதியாக இருந்ததாகக் கூறியுள்ளார். ‘இந்த அமைதியான மாநிலத்தில் ஆளுநர் விரும்பும் அளவிற்கான பிரச்னைகளையும் மோதல்களையும் உருவாக்க முடியாது’ எனவும் கூறினார்.
மேலும், எதிர்கட்சித் தலைவர் வி டி சதீசனின் பேச்சு கலவரத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறினார். காங்கிரஸ் இளைஞரணி போராட்டக்காரர்கள் மீது டிவொய்எஃப்ஐ (DYFI) அமைப்பினர் தாக்குதல் நடத்தியது உயிர் காக்கும் செயல் மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.