பொன்முடி முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் அமைச்சர் பதவியை பறிகொடுத்த பொன்முடி இன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கடந்த 2006 – 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார். வருமானத்துக்கு அதிகமாக ரூ1.75 கோடி சொத்து குவித்த வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் குற்றவாளிகள் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஜெயச்சந்திரன் டிசம்பர் 19-ந் தேதி தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளான பொன்முடி, விசாலாட்சி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். மேலும் இருவருக்கும் தலா ரூ50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் பொன்முடி, விசாலாட்சியின் 3 ஆண்டு சிறை தண்டனையானது மேல்முறையீட்டுக்காக 1 மாதம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் விழுப்புரம் நீதிமன்றத்தில் பொன்முடி, விசாலாட்சி இருவரும் சரணடைய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு தண்டனை கிடைத்துவிட்டது என்பதால் அவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை இழந்துவிட்டார். 3 ஆண்டு சிறை தண்டனைக்குப் பின்னர் 6 ஆண்டுகள் தேர்தலிலும் பொன்முடியால் போட்டியிட முடியாது. இதனையடுத்து பொன்முடி வசம் இருந்த உயர் கல்வித்துறை, கூடுதல் பொறுப்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பொன்முடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறை தண்டனை தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பொன்முடி விவரித்ததாக தெரிகிறது.