திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர், முதல்வர் பங்கேற்பு!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு கீழ் பல்வேறு மாவட்டங்களில் 130க்கும் அதிகமான கல்லூரிகள் இயங்குகின்றன. இந்தக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது. பட்டமளிப்பு விழாவை நடத்த வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் அவ்வபோது போராட்டத்திலும் ஈடுபட்டுவந்தனர். அதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழா நடைபெறாத பல்கலைக் கழகங்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான தேதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஜனவரி 2ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளனர். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க 1,528 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கில், 600 மாணவர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பல்கலைக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்கள் பல்கலைக் கழக வளாக அரங்குகளில் அமரவைக்கப்பட்டு பட்டம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.