நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா தமிழக வெள்ள பாதிப்பு பணிகளை சரி செய்ய மத்திய அரசை எதிர்பார்க்க கூடாது என்று பேசியுள்ளார்.
வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து தமிழக அரசு கோரிய நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்து வருகிறார். தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. பேரிடராக அறிவிக்க முடியாது என கைவிரித்த மத்திய அரசு போதிய நிதியையும் ஒதுக்கவில்லை. இதனால் தமிழக நிவாரணம் மற்றும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது..
இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா பேசியுள்ளார். வந்தவாசி ஸ்ரீருக்மாயி பாண்டுரங்கன் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது ஆந்திர மாநில புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
புயல் வெள்ள பாதிப்புகளின் போது மத்திய அரசு நிவாரண நிதியை கொடுத்ததா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். ஆனால் மாநில அரசுக்குத்தான் அதிக பொறுப்பு உள்ளது. மாநில அரசுக்குத்தான் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு ஒரு கஷ்டம் வந்தால் துணையாக இருக்க வேண்டியது மாநில அரசுதான்.
நம்மால் செய்ய முடியாமல் மத்திய அரசு மீது பழி போடுவது தவறு. மற்ற விஷயங்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்காவிட்டால் நாம் கேள்வி கேட்கலாம். ஆனால் இந்த வெள்ள நிவாரண விவகாரங்களில் மத்திய அரசு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் மாநில அரசு மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தை வழங்கினால் மட்டும்தான் மக்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.