டெல்லி இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு விவகாரத்தில் 2 சந்தேக நபர்களை போலீஸ் உறுதி செய்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் தங்களது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பல்வேறு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே பயங்கர வெடி சத்தம் கேட்டதாக, தூதரக அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மோப்ப நாய்களுடன் டெல்லி போலீசார், வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது காலியான நிலத்தில் கொடியுடன் சுற்றப்பட்ட கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் துணை தூதர் ஒஹாத் நகாஷ் கெய்னர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் ‘மாலை 5.08 மணிக்குப் பிறகு சில நிமிடங்களில் தூதரகத்திற்கு அருகே வெடிச்சத்தம் கேட்டது. தூதரக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். எங்களுடைய பாதுகாப்பு குழு டெல்லி போலீசாருடன் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது’ எனத் தெரித்துள்ளார்.
இதற்கிடையே பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என இந்தியா செல்ல இருக்கும் இஸ்ரேல் நாட்டினருக்கு அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி இஸ்ரேல் தூதரகத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் குண்டுவெடிப்பு நடந்ததாக கூறப்பட்டாலும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து சிறப்பு பிரிவு போலீசார் கூறுகையில், ‘குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கடிதம் ஒன்று மீட்கப்பட்டது. அதனுடன் ஒரு கொடியும் மீட்கப்பட்டது. அந்த கடிதத்தில் இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்கள் இருந்தன. சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்கு இடமான இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இருவரும் எந்த வழியாக அங்கு வந்தனர் என்பதை அறிய, சுற்றியுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகிறோம். தடயங்கள் சேகரிக்கப்பட்டன. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்’ என்று தெரிவித்தனர்.