விஜயகாந்த்தின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
உடல் நலக்குறைவால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணிக்கு காலமானார். இதையடுத்து, அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், மக்கள் வெள்ளத்தில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்தின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விஜயகாந்த் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பொது வாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்தவர் கேப்டன் விஜயகாந்த், திரைத்துரையினரின் கடனை அடைக்க பாடுபட்டவர், அவரின் மறைவு வேதனையளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோரும் விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.