தமிழ்நாட்டின் அரசியல் பொதுவாழ்விற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: கே.பாலகிருஷ்ணன்

“விஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டின் அரசியல் பொதுவாழ்விற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கள் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் மறைவு குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பது பெரும் அதிர்ச்சியையம், வேதனையையும் தருகிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

சாதாரண குடும்ப பின்னணியில் பிறந்த விஜயகாந்த் தனது கடினமான உழைப்பால் திரைப்படத்துறையில் காலடி வைத்து படிப்படியாக உச்சத்தை எட்டியவர். பல திரைப்படங்களில் மக்கள் வாழ்நிலை முன்னேற்றத்திற்காக முற்போக்கு கருத்துக்களை பேசி நடித்து மக்களின் அன்பைப் பெற்றவர். தனது உழைப்பால் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை ஏழை, எளிய மக்களுக்கு உதவும் நல்ல உள்ளம் படைத்தவர். நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர். தேமுதிக கட்சியை தொடங்கி போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்கட்சி தலைவராகவும் செயல்பட்டவர். எதிர்கட்சி தலைவராக பணியாற்றிய காலத்தில் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மக்கள் நலக் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் வலுவாக முன்னெடுத்தவர்.

மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து முக்கிய பங்காற்றியவர். எளிமையானவர், சிறந்த பண்பாளர், வெளிப்படைத் தன்மையுள்ளவர். அவரது மறைவு தமிழ்நாட்டின் அரசியல் பொதுவாழ்விற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அஞ்சலியை செலுத்துகிறது. அவரது மறைவால் வேதனையுற்ற அவரது இணையரும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த்துக்கும், குடும்பத்தினருக்கும், தேமுதிகவின் தொண்டர்கள் மற்றும் அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.