விஜயகாந்துக்கு மதுரையில் சிலை வைக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். விஜயகாந்தின் திடீர் மறைவு செய்தி தொண்டர்கள், ரசிகர்கள் தாண்டி பொது மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த மக்கள் விரைந்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே விஜயகாந்துக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும், நடிகர் சங்கத்துக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்துள்ளன. இந்த நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு விருதுநகர் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “தேமுதிக தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலமின்றி இயற்கை எய்தினார் என்கிற செய்தி கேட்டு, மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அருப்புக்கோட்டை பகுதியில் பிறந்து அம்பாசமுத்திரத்தில் கல்வி கற்று, மாநகர் மதுரையில் வளர்ந்து வாழ்ந்து கலைத்துறையிலும், அரசியலிலும் சாதனை புரிந்துள்ளார். தமிழகத்துக்கு பெருமை சேர்த்த பண்பாளராய், அன்பாளராய், நெறியாளராய் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மாமதுரையில் முழு உருவச் சிலை நிறுவி அவருக்கு நிலைத்த புகழைத் தர வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.