புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் அது குறித்த துயரத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.
இது பற்றி விஜயபாஸ்கர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
புதுக்கோட்டை நமுணசமுத்திரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்த செய்தி இதயத்தை நொறுங்கச் செய்தது. இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், 3 வயது சிறுமி உட்பட 19 பேர் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து, எனது அறிவுறுத்தலின்பேரில் நமது நகர கழக செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மருத்துவமனை விரைந்து தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்
‘படுகாயமடைந்தவர்களுக்கு உடனடியாக மேல் சிகிச்சைகளை வழங்குவதோடு, ஈடு செய்ய முடியாத இழப்பில் தவிக்கும் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் தயவுகூர்ந்து கவனமாக இருங்கள். எவருடைய அலட்சியத்தாலும் அப்பாவி உயிர்கள் ஒருபோதும் பறிபோய்விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.