பாகிஸ்தானில் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான ரா நிதி (RAW) உதவியுடன் பலுசிஸ்தான் தீவிரவாதிகள் 80, 90 கொலைகளை நிகழ்த்தி உள்ளனர் என பாகிஸ்தானின் இடைக்கால பிரதமரான அன்வர் உல் ஹக் காகர் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் இம்ரான்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தான் நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தான் இடைக்கால பொறுப்பு பிரதமராக அன்வர் உல் ஹக் காகர் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானில் தற்போது பொதுத் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தானின் லாகூரில் அன்வர் உல் ஹக் காகர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அன்வர் உல் ஹக் காகர் கூறியதாவது:-
பாகிஸ்தானில் 90,000 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தாலும் 9 பேர் கூட தண்டிக்கப்படவில்லை. இந்தியாவிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு 80,90 கொலைகளை செய்துள்ளனர். இந்தியாவின் ‘ரா’ அமைப்புதான் இந்த கொலைகளுக்கு நிதி உதவி அளிக்கிறது என பகிரங்கமாக அறிவிக்கிறேன். இதனை இந்தியா மறுக்கவும் செய்யலாம். இஸ்லாமாபாத்தில் பலுசிஸ்தான் தனிநாடு கோரும் போராட்டக்காரர்கள் மீது கொடூரமாக போலீசார் தாக்குதல் நடத்தி இருக்கக் கூடாது. ஆனால் போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்காக இஸ்லாமாபாத் சம்பவத்தை இஸ்ரேல், காஸாவில் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுடன் ஒப்பிடுவதை ஏற்க முடியாது. இந்த நாட்டில் யாருக்கும் போராட உரிமை உண்டு.
பலுசிஸ்தான் தனி நாடு கோரும் பலூச் விடுதலை ராணுவம் உள்ளிட்டவை பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயுதங்களை கையில் எடுத்து நிற்பவை. இந்த இயக்கங்களால் 3,000 முதல் 5,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். சொந்த மக்களையே, உறவுகளை இந்த பயங்கரவாதிகள் படுகொலை செய்கின்றனர். இந்த பயங்கரவாதிகளுக்கு இந்தியாவின் ‘ரா’ தான் பணம் கொடுக்கிறது. இவ்வாறு அன்வர் உல் ஹக் காகர் குற்றம் சாட்டினார்.