தமிழகத்தின் சிவங்கை தொகுதியின் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மீண்டும் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் ப. சிதம்பரம். தற்போது ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார். இவரது மகன் கார்த்தி சிதம்பரம். இவர் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருக்கிறார். இந்நிலையில் தான் கார்த்தி சிதம்பரம் மீது பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். அப்போது மத்திய உள்துறை அமைச்சராக ப. சிதம்பரம் செயல்பட்டார். இந்த வேளையில் சீன நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விசா பெற்று கொடுத்த விவகாரத்தில் பணமோசடி செய்ததாக ப. சிதம்பரத்தின் கார்த்தி சிதம்பரம் மீது புகார் எழுந்தது. அதாவது வேதாந்தா குழுமம் சார்பில் பஞ்சாப்பில் மின்உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியை தல்வண்டி சபோ பவர் லிமிடெட் மேற்கொண்டது. இந்த திட்டத்தில் சீனாவை சேர்ந்தவர்கள் பணியாற்ற வேண்டி இருந்தது. இதையடுத்து சீன நிறுவனத்தின் 263 ஊழியர்களுக்கு ப்ராஜெக்ட் விசா பெற்று தத ரூ.50 லட்சம் வரை கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது கூட்டாளி பாஸ்கர ராமன் ஆகியோருக்கு வேதாந்தா குழுமம் சார்பில் வழங்கி உள்ளது தான் புகார்.
இதுபற்றி சிபிஐ விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. அதோடு பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே தான் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்த நிலையில் அமலாக்கத்துறை அதிரடியாக களமிறங்கியது. பணமோசடி தொடர்பான பிரிவில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் முதற்கட்டமாக கடந்த டிசம்பர் 23ம் தேதி விசாரிக்கப்பட்டது. அப்போது கார்த்தி சிதம்பரம் கூறிய தகவல்கள் ரெக்கார்ட் செய்யப்பட்டன. இதையடுத்து 2வது கட்டமாக அவர் இன்று விசாரணைக்கு ஆஜரானார். விசாரணைக்கு ஆஜராக வேண்டி அமலாக்கத்துறை சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று கார்த்தி சிதம்பரம் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.