முதல்வர் குறித்த அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சி.வி.சண்முகம் எம்.பி. நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலம், ஆரோவில், கோட்டக்குப்பம், விழுப்புரம் பழையபேருந்து நிலையம் ஆகிய இடங்களில் 2022-ம் ஆண்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில், அதிமுக மாவட்டசெயலாளரான சி.வி.சண்முகம்எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் அவதூறாகப் பேசியதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம் வழக்குகளைத் தொடர்ந்தார்.
இந்த வழக்குகள் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தன. இதில் ஆஜரான சண்முகத்துக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அதிமுக வழக்கறிஞர்கள் ஆஜராகி, வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், விசாரணையை தள்ளிவைக்குமாறும் வலியுறுத்தினார். இதை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, இந்த 4 வழக்குகளின் விசாரணையையும் வரும் 18-ம்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.