மறைந்த தேவேந்திரர் குல வேளாளர் அமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் மகள் சந்தன பிரியா, நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேசியிருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்த திடீர் சந்திப்பின் மூலம் பசுபதி பாண்டியன் மகன் சந்தனப் பிரியா வரக் கூடிய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்குகிறாரா என்ற பேச்சும் எழுந்துள்ளது. இதனிடையே இந்தச் சந்திப்பு குறித்து விசாரித்ததில், ஜனவரி 10ஆம் தேதி அன்று நடைபெறும் பசுபதி பாண்டியனின் குருபூஜை நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கவே சீமானை சந்தனப் பிரியா சந்தித்து பேசியதாகவும் மற்றபடி வேறு எந்த அரசியலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே விஜயகாந்த் நினைவிடத்திலும் பசுபதி பாண்டியன் மகள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இதன் மூலம் பொதுவாழ்வில் ஈடுபட அவர் தீவிரம் காட்டுவது தெரிய வருகிறது.
பசுபதி பாண்டியன் நினைவு தினமான ஜனவரி 10ஆம் தேதி அன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோர் மது அருந்தி விட்டு வரக்கூடாது எனப் பேசியதன் மூலம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்திருந்தார் சந்தனப் பிரியா. தென் மாவட்டங்கள் முழுவதும் ஏற்கனவே சுற்றுப்பயணம் சென்ற இவர், தனது தந்தையின் குருபூஜை நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பும் விடுத்து வருகிறார். ஜனவரி 10 ஆம் தேதி அன்று பசுபதி பாண்டியனின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் என்பதால் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. தலைமையில் 10 கூடுதல் காவல்கண்காணிப்பாளர்கள், ஒரு காவல் உதவி கண்காணிப்பாளர், 20 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 60 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
பசுபதி பாண்டியனை பொறுத்தவரை திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்டாலும் தூத்துக்குடி மாவட்டம் அலங்காரத் தட்டு கிராமத்தில் தான் அவரது நினைவிடம் அமைந்துள்ளது. அங்கு ஆண்டு தோறும் ஜனவரி 10ஆம் தேதி அன்று நினைவு நாள் அனுசரிக்கப்படுவது வழக்கம்.