பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளதாக அளித்த புகாரில் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த வழக்கில் ஜன.10-ம் தேதி (புதன்கிழமை) தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பபட்ட நோட்டீஸை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் எஸ்சி, எஸ்டி ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முரசொலி அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “பஞ்சமி நிலம் அல்ல என அரசு அறிக்கை அளித்துள்ளது. இதனால், புகாரை முடிக்க முடிவெடுத்துள்ளதாக ஆணையம் கூறியது. ஆனால், திடீரென புகார் நிலுவையில் உள்ளதாக கூறுகின்றனர். பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்களை புகார்தாரர் சமர்ப்பிக்கவில்லை. அரசியல் காரணத்துக்காக தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் இந்தப் புகாரை நிலுவையில் வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆணையம் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. பஞ்சமி நிலமா, இல்லையா என வருவாய்த் துறை தான் விசாரிக்க முடியுமே தவிர, தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் தலையிட முடியாது” என்று வாதிட்டார்.
அப்போது தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், “பட்டா மற்றும் விற்பனை பத்திரம் ஆகியவை உரிமையாளரை முடிவு செய்வதற்கான இறுதியான ஆதாரம் அல்ல. ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது. விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
அப்போது புகார்தாரர் சீனிவாசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி, “வழக்கு நிலுவையில் இருந்தபோது பட்டா வழங்கப்பட்டது. எனவே, ஆணையம் விசாரணை செய்வது சரியானதுதான். வில்லங்க சான்றிதழில் 1974-ல் மாதவன் நாயர் பெயரோ, அஞ்சுகம் பதிப்பகத்தின் பெயரோ இல்லை” என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் நாளை மறுதினம் (ஜன.10) தீர்ப்பளிப்பதாக கூறி, நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.