குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இக்குற்றத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் தண்டனை காலம் முடிவதற்குள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இந்த விடுதலையை நீதிமன்றம் ரத்து செய்து, குற்றவாளிகளை ஆஜராக சொன்னது. ஆனால் அவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.
கடந்த 2002ம் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தையடுத்து மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரிக்கத் தொடங்கின. இந்த கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். அவரது உறவினர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இதில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. ஆனால் தண்டனைக்காலம் முடிவடைவதற்குள் இவர்களை கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று குஜராத் மாநில அரசு விடுதலை செய்தது. விடுதலையானவர்களுக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து சிலர் வரவேற்பளித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த எதிர்ப்பு குஜராத் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதாவது, 1992ம் ஆண்டு தண்டனை குறைப்பு கொள்கையின் இதனை குற்றவாளிகள் அனைவரும் சிறையில் கழித்திருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் தண்டனை குறைப்பு கோரினார்கள். சிறை ஆலோசனைக் குழு பரிந்துரைகள், மாவட்ட சட்ட வல்லுநர்கள் அறிவுரைகளின் அடிப்படையில்தான் அவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று விளக்கமளித்திருந்தது. இருப்பினும் இந்த விடுதலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சுபாஷினி அலி உட்பட மூவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர் விசாரித்து வந்தது. வழக்கின் வாதங்கள் முடிவுற்ற நிலையில் நேற்று முன்தினம் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில், “இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. மகாராஷ்டிரா அரசுதான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம். பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர். நீதிபதிகளின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், குற்றவாளிகள் சிலர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றவாளிகள் அனைவரும் குஜராத்தின் தாஹோட் மாவட்டத்தின் சிங்வாட், ரந்திக்பூர் கிராமங்களை சேர்ந்தவர்கள். இவர்களின் விடுதலையை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை இவர்கள் இந்த கிராமத்தில்தான் இருந்திருக்கிறார்கள் என்று உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். ஆனால், தீர்ப்பு வந்த பின்னர், அதாவது குற்றவாளிகளின் விடுதலை ரத்து செய்வதாகவும், அவர்கள் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறிய பின்னர் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர். மொத்தம் 11 குற்றவாளிகளில் 9 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று தாஹோட் மாவட்ட எஸ்.பி பல்ராம் மீனா கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.