இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சந்திப்பு!

இந்தியா – இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) தொடர்பாக விரைவில் முடிவு எட்டப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமரின் இல்லத்தில் சந்தித்தார். அப்போது இந்தியா – இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விரைவில் முடிவு எட்டப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிகையில், “இங்கிலாந்து – இந்தியா நாடுகள் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் சேர்ந்து இங்கிலாந்து பிரதமரும் விவாதித்தார். குறிப்பாக இங்கிலாந்து – இந்தியா இடையே தற்போது நடந்து வரும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையில் விரைவில் வெற்றிகரமாக முடிவு எட்டப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இந்தியாவின் வர்த்தக நிறுவனங்களுடன் வணிகம் மற்றும் தொழில்நுட்ப உறவுகளை வலுப்படுத்துவதுவதற்கான அரசின் ஆதரவு உட்பட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அரண்களை உறுதிப்படுத்துவதற்கான இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து தான் மற்றும் தனது அரசின் ஆர்வத்தை ரிஷி சுனக் வெளிப்படுத்தினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிாலந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை 2022 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த ஒப்பந்தத்தின் 13-வது சுற்று பேச்சுவார்த்தை டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அப்போது இரண்டு தரப்பில் உள்ள சிக்கல்களை சரி செய்து ஒப்பந்தத்தை மீண்டும் முன்னெடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டது.

ரிஷி சுனக்குடனான சந்திப்பு குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் ஓர் அன்பான சந்திப்பு. அவருடன் பரந்த அளவிலான பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிரச்சினைகள், அமைதியான உலகளாவிய நிலையான விதிகளுக்குட்பட்டு எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பது குறித்தும் விவாதித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது ராஜ்நாத் சிங், இங்கிலாந்து பிரதமருக்கு ராம் தர்பார் சிலையை பரிசாக வழங்கினார்.அப்போது போது இங்கிலாந்து பாதுகாப்புத்துறை ஆலோசகர் டிம் பாரோவ் உடன் இருந்தார். முன்னதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக இங்கிலாந்து சென்றிருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் இங்கிலாந்து செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.