ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் கருத்தில் உடன்பாடு இல்லை: மம்தா பானர்ஜி!

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் கருத்தில் தங்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தனது நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

நாடு முழுவதும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடிப்பது குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, இந்தப் பொருள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி இருந்தது. இதற்கு, மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

1952-ல் நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான முதல் பொதுத் தேர்தல், நாடு முழுவதும் ஒரே நேரத்தில்தான் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்தும் சில காலங்களுக்கு ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்தது. ஆனால், அதன் பிறகு அந்த முறை சிதைந்துவிட்டது.

உங்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்துடன் என்னால் உடன்பட முடியவில்லை என்பதில் நான் வருந்துகிறேன். உங்கள் உருவாக்கம் மற்றும் முன்மொழிவுடன் நாங்கள் உடன்படவில்லை. ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறாதவாறு இருப்பதுதான் நமது அமைப்பின் அடிப்படை. அதில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது. ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறாமல் இருப்பது என்பது, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். இவ்வாறு மம்தா பானர்ஜி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து வரும் 15-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் தலையைிலான ஆய்வுக் குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்குழு கடந்த 6ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள் ஜனவரி 15-ம் தேதிக்குள் தெரிவிக்கும் கருத்துகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். கருத்துகளை ஆய்வுக்குழுவின் இணையதளம் அல்லது இ-மெயில் மூலம் தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.