மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க, 12,176 காளைகள் தயார்!

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க, 12,176 காளைகளும், 4,514 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளார்கள் என்றும் முதல் பரிசு பெறும் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

வருகிற 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பருகிறது. தமிழர் திருநாளான பொங்கலில் ஜல்லிக்கட்டு போட்டியும் பிரபலமானது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறிப்பாக மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரபலமானது. இந்த நிலையில், மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருவதாக அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். இது தொடர்பாக பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:-

பொங்கலை முன்னிட்டு வருகிற 15 ,16 மற்றும் 17 ஆம் தேதி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் முனைப்போடு இதனை செய்து வருகிறது. 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16 ஆம் தேதி பாலமேட்டிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இதற்கு நேற்று மதியம் 12 மணியில் இருந்து இன்று மதியம் 12 மணி வரையிலும் ஜல்லிக்கட்டு மாடுகளையும் மாடுபிடி வீரர்களையும் பதிவு செய்யும் பணி நடந்தது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏறத்தாழ 12,176 காளைகளும், அதில் கலந்துகொள்ள கூடிய மாடுபிடி வீரர்கள் 4,514 பேரும் கலந்துகொள்ள பதிவு செய்திருக்கிறார்கள். அலங்காநல்லூரில் கலந்துகொள்ள கூடிய மாடுகளின் எண்ணிக்கை 6,099. இதேபோல் பாலமேட்டில் 3,677 காளைகளும், அவனியாபுரத்தில் 2,400 காளைகளும் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இதேபோல் வீரர்களை பொறுத்தவரை அவனியாபுரத்தில் 1,318 பேரும், பாலமேட்டில் 1,412 பேரும், அலங்காநல்லூரில் 1284 பேர் என தனித்தனியாக பதிவு செய்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதேபோல் முதல் பரிசு பெறும் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.