ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் படப்பிடிப்பு: உமர் அப்துல்லா கண்டனம்!

ஜனநாயகத்தின் சின்னத்தை பா.ஜ.க. வருந்தத்தக்க நிலைக்கு குறைத்திருப்பது வெட்கக்கேடானது என உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற கட்டடத்தில் ஹுமா குரேஷி நடித்துள்ள ‘மகாராணி’ என்ற தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கடந்த 1990-களில் பீகாரில் நடந்த அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டசபையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சியின் துணை தலைவருமான உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஒரு காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூடி, முக்கிய சட்டங்களை இயற்றிய இடத்தை தற்போது நடிகர்கள் நாடகங்களுக்காக பயன்படுத்துகின்றனர். ஜனநாயகத்தின் சின்னத்தை பா.ஜ.க. இந்த வருந்தத்தக்க நிலைக்கு குறைத்திருப்பது எவ்வளவு வெட்கக்கேடானது. இவ்வாறு உமர் அப்துல்லா பதிவிட்டுள்ளார்.