தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் லை சிங் டி அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கிழக்கு ஆசியாவில் பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். சீனாவுக்கு அருகே அமைந்துள்ள இந்நாட்டை தனிநாடாக சீனா அங்கிகரிக்கவில்லை. மேலும், தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்றும் சீனா கூறி வருகிறது. இதனிடையே, தைவானில் 4 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. அந்நாட்டின் ஆட்சியில் உள்ள ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் லை சிங் டி அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். அவரை எதிர்த்து சீனா ஆதரவு பெற்ற தேசியவாத கட்சியை சேர்ந்த ஹவ் யொ-ஹி அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். அதேபோல், தைவான் மக்கள் கட்சியை சேர்ந்த கோ வென் ஜி என்பவரும் வேட்பாளராக களமிறங்கினார்.
அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர். வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் லை சிங் டி அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, லை சிங் டி தைவானின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தைவான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லை சிங் டி சீன எதிர்ப்பு கொள்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.