ஒபிசி என்பதால் மோடி பங்கேற்க சாமியார்கள் எதிர்க்குறாங்க: உதயநிதி!

மோடி பிற்படுத்தபட்ட வகுப்பு என்பதால்தான் ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க சாமியார்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இந்த ஏற்றத்தாழ்வு குறித்து தான் நான் பேசினேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

அயோத்தியில் வரும் 22-ந் தேதி ராமர் கோவில் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜனவரி 22 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் நான்கு சங்கராச்சாரியார்களில் யாரும் கலந்து கொள்ளப் போவதில்லை. எங்களுக்கு யார் மீதும் எந்தத் தீய எண்ணமும் இல்லை. ஆனால் இந்து மதத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றுவதும், மற்றவர்கள் அவ்வாறு செய்யுமாறு அறிவுறுத்துவதும் சங்கராச்சாரியார்களின் பொறுப்பு. அவர்கள் (கோயில் கட்டுமானம் மற்றும் விழா அமைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள்) இந்து மதத்தில் நிறுவப்பட்ட விதிமுறைகளை புறக்கணிக்கிறார்கள் என்று கூறியிருந்தார்கள். இன்னொரு பக்கம், பிரதமர் மோடி, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை நடத்த இந்து மதத் தலைவர்களான சங்கரச்சாரியார்கள் எதிர்ப்பதாக விமர்சனங்களும் எழுந்தன.

இந்த நிலையில், மோடி ஓபிசி வகுப்பை சேர்ந்தவர் என்பதால்தான் சாமியார்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இந்த ஏற்றத்தாழ்வைத்தான் நான் பேசினேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

வரும் 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்க போறாங்க.. தாராளமாக திறங்க நாங்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஏனென்றால் நாங்க எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் கிடையாது. ஆனா பாருங்க ஒரு நான்கு சாமியார்கள் பிரதமர் அந்த நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என்று சொல்கிறார்கள். ஏனென்றால் அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவராம். இந்த ஏற்றத்தாழ்வை ஒழிக்க வேண்டும் என்று தான் நான் 4 மாதம் முன்னாடி பேசினேன். ஆனால் அதை தப்பாக பொய்யாக செய்தியை பரப்பி திரித்தார்கள். இப்போது புரிகிறதா.. நான் அப்போ பேசியது ஒன்றிய பிரதமர் மோடிக்கும் சேர்த்துதான் நான் பேசியிருக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், கூறியதாவது:-

இங்கே எதிர்க்கட்சி என ஒன்று இருக்கிறது.. அதிமுக.. அந்தக் கட்சி என்ன செய்து கொண்டு இருக்கிறது. நான் உண்மையை சொன்னால் எடப்பாடி உள்ளே போய்விடுவார் என்று இப்போது ஓபிஎஸ் சொல்கிறார். இல்லை.. இல்லை.. நான் உண்மையை சொன்னால் ஓபிஎஸ் தான் உள்ளே போவார் என்று எடப்பாடி சொல்கிறார். யார் முதலில் உள்ளே போக போகிறார்கள் என்றுதான் இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி உள்ளது. எனக்கு தெரிந்து இரண்டு பேருமே உள்ளே போனாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அதிமுகவினருக்கு இருக்கும் பெரிய பிரச்சினையை யார் காலை யார் எப்போது வாரிவிடுவார்கள் என்பதுதான். அவுங்களுக்கு தேவை இரண்டு கால்கள்தான். ஜெயலலிதா இருக்கும் வரை அவர் காலில் விழுந்து வந்தார்கள். அதன்பிறகு கொஞ்ச நாள் ஓபிஎஸ் காலில் விழுந்து வந்தார்கள். அப்புறம் சசிகலா காலில் விழுந்தாங்க.. அப்புறம் அவரது காலையே வாரிவிட்டுவிட்டார்கள். நீங்களா என்னை முதல்வர் ஆக்கினீர்கள் என்று எடப்பாடி கேட்டார். அப்புறம் கூட இருந்த ஓபிஎஸ் காலையும் வாரிவிட்டு விட்டார். மக்கள் பிரச்சினை பற்றி அவர்களுக்கு எந்த நேரத்திலும் கவலை இருந்தது கிடையாது.

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி ஒரு கூட்டத்தில் ஒத்துக்கிட்டார். ஆமா.. நான் மக்களை பார்த்து முதல்வர் ஆகல.. தவழ்ந்து தவழ்ந்துதான் காலை பிடித்துதான் முதல்வர் ஆனேன் என்று அவரே ஒத்துக்கிட்டார். அது மட்டும் இல்லை. பொதுக்குழு என ஒரு நிகழ்ச்சியை எடப்பாடி கடந்த மாதம் நடத்தினார். அதில் என்னை விமர்சித்து இருக்கிறார். அதாவது அதிமுக மதுரை மாநாட்டை நான் விமர்சித்து விட்டேனாம். பார்ப்பவர்கள் எல்லாம் அஞ்சும் அளவுக்கு அந்த மாநாடு நடைபெற்றது. ஆனால் அந்த மாநாட்டை உதயநிதி விமர்சிக்கிறார் என்று எடப்பாடி சொல்லியிருக்கிறார். உண்மை தான்.. பார்க்குறவங்க எல்லாம் அந்த மாநாட்டில் போட்ட புளி சாதம் தக்காளி சாதம் எல்லாவற்றையும் பார்த்து அஞ்சி ஓடிப்போனங்க.. அதனால்தான் அவரே சொல்கிறார் அந்த மாநாட்டை பார்த்து எல்லாரும் பயப்படுறாங்க.. ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்காக நீங்கள் நடத்தியதுதான் மதுரை மாநாடு.. ஆனால் ஒரு மாநாடு எப்படி நடத்த வேண்டும் என்று வரும் 23 ஆம் தேதி இளைஞரணி மாநாட்டில் நடத்தி காட்டுகிறோம். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.