“திருவள்ளுவரை முதலில் துறவி என்றே சொல்லக்கூடாது. அவருக்கு திருமணமாகி மனைவி இருந்ததாக ஒரு கருத்து இருக்கிறது. அதேபோல, இல்லறத்தை பற்றி அத்தனை கவித்துவமாக திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார்” என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.
காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படத்தை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பகிர்ந்தது பெரிய அளவில் சர்ச்சையானதை அடுத்து, இதுகுறித்து கனிமொழி ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். திருக்குறள் குறித்த அறிவும், திருவள்ளுவரை பற்றிய புரிதலும் இல்லாதவர்கள் தான் இப்படி செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகத் தமிழர்களால் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த சூழலில், பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதே சமயத்தில், இந்த நாளானது திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் எக்ஸ் தளத்தில் இன்று ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதில் காவி உடையில் திருவள்ளுவரின் படம் இருந்தது. அந்தப் பதிவில், திருவள்ளுவரை “சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதான் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
டெங்கு, மலேரியாவை போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், எந்த மதத்திலும், சாதியிலும் அடக்க முடியாத திருவள்ளுவரை சனாதன துறவி என ஆளுநர் கூறியது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதிலளித்து கூறியதாவது:-
திருக்குறளை பற்றிய அடிப்படை அறிவும், திருவள்ளுவரை பற்றிய அடிப்படை புரிதலும் இல்லாததை தான் ஆளுநரின் இந்த செயல் காட்டுகிறது. இதை வேறு எப்படி சொல்வது? திருவள்ளுவரை ஒரு துறவி என்று யாரும் சொன்னது கிடையாது. அவருக்கு திருமணமாகி மனைவி இருந்ததாகவும் ஒரு கருத்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இல்லறத்தை பற்றி திருவள்ளுவரை போல கவித்துவமாக எழுதிய கவிஞர்கள் இதுவரை யாரும் கிடையாது. சனாதனத்தையும், இந்துத்துவத்தையும் திருவள்ளுவர் மீது நாம் திணிக்க முடியாது. இதை அவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சாதி, மதத்தை கடந்து நிற்பதும், மனிதத்தை பேசுவதும் தான் திருக்குறள். எனக்கு தெரிந்து, திருவள்ளுவருக்கு அடுத்து மனிதநேயத்தின் அடையாளமாக இருப்பவர் பெரியார். அதனால் திருவள்ளுவருக்கு கறுப்பு உடை வேண்டுமானால் போடலாம். வேறு நிறம் போடுவதற்கு வாய்ப்பே இல்லை. இவ்வாறு கனிமொழி பேசினார்.