திமுக பைல்ஸ்-3 ஆடியோவை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, திமுக – காங்கிரஸ் திட்டமிட்டு 2ஜி விசாரணையை நீர்த்து போக செய்யும் வகையில் செயல்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை திமுகவினர் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, திமுக பைல்ஸ் என்ற பெயரில் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திமுக பைல்ஸ் பாகம் ஒன்றை வெளியிட்டார். அதில், திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் திமுக பைல்ஸ் பாகம் இரண்டை வெளியிட்டார். அதில், அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், திமுக. பைல்ஸ் பாகம் மூன்று என பெயரில் என்ற வீடியோ பதிவை அண்ணாமலை நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில், திமுக எம்பி டி.ஆர்.பாலு, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
‘இண்டியா’ கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பல நாடாக்களில் இதுவும் ஒன்று. இந்த கூட்டணி 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை வேறு பெயரை கொண்டிருந்தது. டி.ஆர்.பாலு, ஜாபர் சேட் உரையாடலில், 2ஜி விசாரணையில் சிபிஐ ரெய்டுகளின் நேரத்தை திமுக – காங்கிரஸ் முடிவு செய்து, விசாரணையை நீர்த்துபோகச் செய்யும் வகையில் செயல்பட்டனர். வரும் நாட்கள் இதுதொடர்பாக மேலும் பலவேறு தகவல்கள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.