துரோகக் கூட்டத்தை ஜனநாயக ரீதியில் வென்றெடுக்க பாடுபடுவோம்: ஓ.பன்னீர்செல்வம்

துரோகக் கூட்டத்தை ஜனநாயக ரீதியில் வென்றெடுக்க பாடுபடுவோம். வருகின்ற மக்களவைத் தேர்தலில் களப்பணியாற்ற அனைவரும் உறுதி ஏற்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களின் மகத்தான ஆதரவோடும், தொண்டர்களின் எழுச்சியோடும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அரசியல் கட்சியை நிறுவி, பத்தாண்டு கால பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டிற்கு வழங்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு எனது மரியாதையினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் துவக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மகத்தான மாபெரும் மக்கள் இயக்கத்தை துரோகக் கூட்டத்திடமிருந்து மீட்கும் வகையில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் களப் பணியாற்ற நாம் அனைவரும் உறுதி ஏற்போம். துரோகக் கூட்டத்தை ஜனநாயக ரீதியில் வென்றெடுத்து, இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நனவாக்க நாம் அனைவரும் பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.