டெல்லி டெலிகிராப் சாலையில் தான் வசித்த 9பி, அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு மஹூவா மொய்த்ரா வெளியேறினார்.
தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.மஹூவா மொய்த்ரா மக்களவையில் பல கேள்விகளை எழுப்பினார். தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி சார்பில் இந்த கேள்விகளை அவர் கேட்டுள்ளார். இதற்காக தர்ஷன் ஹிராநந்தினியிடம் பணம் மற்றும் பரிசு பொருட்களை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மொய்த்ரா மக்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 1 மாதத்துக்குள் டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலிசெய்யும்படி, அரசு குடியிருப்புகள் (எஸ்டேட்ஸ்) இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது.
தனக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதாலும், வீட்டை காலி செய்வதில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மஹூவா மொய்த்ரா வழக்கு தொடர்ந்தார். இதை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இதையடுத்து மஹூவா மொய்த்ரா வசித்த அரசு இல்லத்தை காலி செய்வதற்கான குழுவினரை அரசு குடியிருப்புகள் இயக்குநரகம் நேற்று காலை அனுப்பியது. ஆனால் அதற்கு முன்பாகவே, டெல்லி டெலிகிராப் சாலையில் தான் வசித்த 9பி, அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு மஹூவா மொய்த்ரா வெளியேறினார்.