மியான்மர் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!

மியான்மர் ராணுவ விமானம் மிசோரம் மாநிலம் லெங்புய் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். விமானத்தில் விமானி உட்பட 14 பேர் இருந்தனர், காயமடைந்தவர்கள் லெங்புய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மிசோரம் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தெரிவித்தார்.

அண்மையில் இந்தியாவுக்குள் நுழைந்த மியான்மர் ராணுவ வீரர்களை அழைத்துச் செல்ல இந்த விமானம் வந்ததாகவும், லெங்புய் விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து விலகி சேதமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் ஒரு இன கிளர்ச்சிக் குழுவுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து மிசோரமுக்கு தப்பிச் சென்ற 184 மியான்மர் வீரர்களை இந்தியா தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பியதாக அசாம் ரைபிள்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் மொத்தம் 276 மியான்மர் வீரர்கள் மிசோரமுக்குள் நுழைந்ததாகவும், அவர்களில் 184 பேர் திங்களன்று திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். அவர்கள் மியான்மர் விமானப்படை விமானங்கள் மூலம் ஐஸ்வால் அருகே உள்ள லெங்புய் விமான நிலையத்தில் இருந்து அண்டை நாட்டின் ராக்கைன் மாநிலத்தின் சிட்வே வரை கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர் கூறினார். மீதமுள்ள 92 வீரர்கள் இன்று செவ்வாய்க்கிழமை திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.