பாஜக பெண் நிர்வாகியின் சகோதரியை கொடூரமாக தாக்கிய பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கூறியுள்ளார்.
இதுகுறித்து வன்னியரசு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
பாஜக எனும் சமூகவிரோத கட்சியில் அமர் பிரசாத் ரெட்டி எனும் சமூக விரோதியின் ரவுடித்தனம். சென்னை – கோட்டூர் புரத்தைச் சார்ந்த தேவி என்பவரின் தங்கை ஆண்டாளிடம் 50,000 ரூபாய் கொடுத்து உள்ளார் பாஜக அமர் பிரசாத் என்பவர். எதற்காகவெனில், தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை வரவேற்க ஆட்களை கூட்டி வருவதற்காக. ஆனால், ஆண்டாள் அவர்கள் கூட்டி வரவில்லையாம். அதற்காக அமர் பிரசாத் தலைமையிலான ரவுடிக்கும்பல் ஆண்டாள் வீட்டுக்கு போயுள்ளது. அங்கு ஆண்டாள் சகோதரி தேவி இருந்துள்ளார். அவரை அடித்து கொடுமை படுத்தியுள்ளது பாஜக ரவுடிக்கும்பல். கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. காவல்துறை உடனடியாக பாஜக ரவுடிக்கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக பாஜக பெண் நிர்வாகியின் சகோதரி அளித்த போலீஸ் புகாரில், “நான் என் தங்கையுடன் வசித்து வருகிறேன். என் தங்கை ஆண்டாள் பாஜக மாவட்ட துணைத் தலைவராக இருந்து வருகிறார். கடந்த 19-1-24 அன்று பாரத பிரதமர் தமிழ்நாடு வந்தபோது சித்ரா நகரில் இருந்து ஆட்களை அழைத்து வருவது சம்பந்தமாக என் தங்கைக்கும் நிவேதா என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்தது. அதை பற்றி எனக்கு எந்த விவரமும் தெரியாது. ஆனால், 21-1-24 என்று இரவு 8.15 மணியளவில் நான் என் தங்கையின் வீட்டில் இருந்தபோது எங்கள் வீட்டிற்கு பாஜக அமர் பிரசாத் ரெட்டியிடம் ஓட்டுநராக வேலை செய்யும் மண்டல துணைத் தலைவர் ஸ்ரீதர், பாஜக மகளிர் அணி மண்டல தலைவர் நிவேதா, பாஜக மாவட்ட துணைத் தலைவர் கஸ்தூரி இன்னும் எனக்கு தெரியாத 3 நபர்கள் என் தங்கையின் வீட்டுற்கு வந்தார்கள்.
என் ஓனர் அமர்பிரசாத் ரெட்டியிடம் உன் தங்கை பணம் வாங்கி வந்துவிட்டார். அதில் எங்களுக்கு பங்கு கொடு என்று கேட்டு எங்களை அடிக்க தொடங்கினார்கள். எங்களை அடிக்கும் போது அமர் பிரசாத் ரெட்டி தான் உங்களை அடிக்க சொன்னார் என்று சொல்லி அடித்தனர். அவர்களை என்னை அடித்து என் மண்டையை உடைத்தார்கள். என் தங்கையை அடித்து எங்கள் வீட்டையும் தாக்கினார்கள். ஸ்ரீதர் என்னை அடிக்கும்போது தான் போட்டிருந்த பேண்டை அவிழ்த்து காட்டி அசிங்கமாக திட்டி எங்கள் பங்கு வரவில்லை என்றால் உங்களை குடும்பத்துடன் கொன்று விடுவேன் என்று மிரட்டினார். என்னை அவர்கள் அடிக்கும்போது கஸ்தூரி என்பவர் என் கைகளை பிடித்துக் கொண்டார். நான் என் மண்டை உடைந்த உடன் நான் பாரதி ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டேன். நான் அவர்களுக்கு பயந்து இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை. எங்கள் வீட்டுக்கு வந்து என் மண்டையை உடைத்து என் தங்கையை அடித்து எங்கள் வீட்டை உடைத்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.