2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நேற்று செவ்வாய்க்கிழமை, அஸ்ஸாம் கல்லூரியில் அளிக்கப்பட்டிருந்த அனுமதி திடீரென மறுக்கப்பட்டதால், காங்கிரஸ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும், அஸ்ஸாம் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த சாலைத் தடுப்புகள் சேதமாயின. அதையடுத்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ராகுல்காந்தி மக்களை இதுபோன்ற வன்முறை செயலுக்குத் தூண்டுவதாக குற்றம் சாட்டினார். மேலும் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்வதற்கு காவல்துறைக்கு பரிந்துரைத்தார். அதன்படி ராகுல் காந்தியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சிப்ஸாகர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, “ராகுல் காந்தியின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வுக் குழு இதுகுறித்து விசாரணை நடத்தும். மக்களவைத் தேர்தலுக்குப் பின்பு ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்” என்று தெரிவித்தார்.