திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு பிப். 9 வரை நீதிமன்ற காவல்!

வீட்டில் பணி செய்த பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏவின் மகன், மருமகளை பிப்ரவரி 9-ம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன். இவர், திருவான்மியூர் சவுத் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மனைவி மெர்லினாவுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 18 வயது இளம்பெண், 6 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்க்கப்பட்டார். இந்த பெண்ணை மெர்லினாவும், அவரது கணவரும் தாக்கி கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக எம்எல்ஏவின் மகன், மருமகள் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் கடந்த 18-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா இருவரும் தலைமறைவாகினர். அவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனிடையே அவர்கள் ஆந்திராவுக்கு காரில் செல்வது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, நேற்று வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் இருவரையும் போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை சென்னை அழைத்து வந்த போலீசார் இன்று (ஜன.26) அதிகாலையில் எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு விவரங்களை விசாரித்த நீதிபதி, இருவரையும் வரும் பிப்ரவரி 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.