1998 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவை இங்கே அழைத்து வந்து கூட்டணியை உருவாக்கியவர் ஜெயலலிதா என அண்ணாமலைக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனும் கடும் கோபத்திற்கு உள்ளாவான். அதிமுகவை கட்டிக்காத்த ஜெயலலிதாவை பற்றியும், எடப்பாடியார் பற்றியும், அதிமுகவை பற்றியும் மிகக் கடுமையான விமர்சனங்களை சில பாஜக தலைவர்கள் முன் வைத்துள்ளனர். அத்தகைய நபர்களோடு இவர்கள் சென்றால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் வீறுகொண்டு செயல்படுவான்” என்றார்.
அப்போது செய்தியாளர்கள், எம்ஜிஆர் என்றால் ஒருவர்தான் இருக்க முடியும் என்பது போல் மோடி என்றால் ஒருவர்தான் என அண்ணாமலை பேசியது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு கேபி முனுசாமி, “என் மண் என் மக்கள் சுற்றுப் பயணத்தின்போது ஊடகங்களை அழைத்து தான் நினைப்பதை பேசி வருகிறார் அண்ணாமலை. அவர் சுற்றுப்பயணம் செய்யாமல் கமலாலயத்தில் கொடுக்கும் பேட்டியைத்தான் இந்த யாத்திரையிலும் கொடுத்து வருகிறார்.” என்றார்.
மேலும் பேசிய கே.பி.முனுசாமி, “1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக, வட மாநிலங்களில் மட்டும் தான் இருந்தது. தென் மாநிலங்களில் பாஜக கட்சியே கிடையாது. பாஜகவை இங்கே அழைத்து வந்து தேசிய ஜனநாயக கூட்டணியை ஏற்படுத்தி பாஜகவை தென் மாநிலங்களில் அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா தான். வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசக்கூடாது.
தேசிய ஜனநாயக கூட்டணி தங்கள் வீடு எனப் பேசுகிறார் அண்ணாமலை. தேசிய ஜனநாயக கூட்டணி அமையும்போது பள்ளி மாணவராக இருத்திருப்பார் அண்ணாமலை. தமிழ்நாட்டுக்கான உரிமையை தராததால் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ஜெயலலிதா வெளியேறினார். தேசிய ஜனநாயக கூட்டணி நாங்கள் கட்டிக் கொடுத்தது; நாங்கள் உருவாக்கியது என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ளவேண்டும்.
அண்ணாமலை தனது கட்சியை முன்னிலைப்படுத்தாமல், தன்னை முன்னிலைப்படுத்தி பேசுகிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயை வாழ்த்தி பேசித்தான் மோடி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். ஆனால் மோடியை உருவாக்கிய வாஜ்பாய் பற்றி அண்ணாமலை பேசுவதே இல்லை. பிரதமர் மோடியை மட்டும் முன்னிறுத்தி அண்ணாமலை அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார். அண்ணாமலையின் பேச்சை பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் அயோத்தி ராமர் கோவில் பற்றி பேசிய கேபி முனுசாமி, “ராமர் அனைவருக்கும் தெய்வம். அந்த தெய்வத்தை வைத்து யாராவது ஏமாற்றினால், ராமர் சும்மா இருக்கமாட்டார். அதற்குரிய தண்டனையை ராமபிரான் வழங்குவார். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தப் பின் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை அண்ணாமலை உணர்வார்” எனத் தெரிவித்துள்ளார்.