மக்களை அடிமையாக்குவதற்காகவே இந்தியை திணிக்கிறார்கள்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

மக்களை அடிமையாக்குவதற்காகவே இந்தியை திணிக்கிறார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-

இந்தியை பேசாதவர்களிடம் திணிக்க என்ன காரணம் இருக்க முடியும்? நாம் பேசுவது தமிழ். இதற்கு மேல் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் ஏதாவது பலன் கிடைக்கும் என்று சொன்னால் ஏற்கலாம். பேரறிஞர் அண்ணா தெளிவாக சொன்னார், இருமொழிக் கொள்கை பற்றி. ஒன்று தமிழ் மற்றொன்று ஆங்கிலம். ஆங்கிலத்தை வைத்து கல்வியை சிறப்பாக பெறலாம். ஆராய்ச்சி, தொழில்நுட்பம் என பல துறைகளில் ஆங்கிலத்தில் பல நூல்கள் உள்ளன.

அதேபோல் இன்று வர்த்தகத்தில் ஆங்கிலம் முக்கியமானது. வெளிநாட்டில் தொழில் செய்ய வேண்டும் என்றால் ஆங்கிலம் தேவை. எனவே அதை கற்பதில் ஆர்வத்தோடு உள்ளோம். ஆனால் எல்லா வகையிலும் தொழிலுக்கோ, கல்விக்கோ, வரலாற்றை அறிவதற்கோ தேவையில்லாத மொழியை நம் மீது திணிக்க வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால் அதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்? 100 ஆண்டுகளாக ஒரே ஒரு காரணம் தான். நம்முடைய தனி அடையாளத்தை அழித்து, மறைத்து எல்லோரையும் போல் நம்மை மாற்ற வேண்டும். தனித்துவத்தை அழித்து அடிமையாக்க வேண்டும் என்ற காரணம்தான். இதனாலேயே இந்தியை திணித்து நம்மை பாதிக்க வைக்கிறார்கள்.

இதுபோல் இந்தி திணிப்பை எதிர்த்து நம் மொழியை காப்பாற்றுவதற்கு இன்று நாம் நன்றி கூறும் தியாகிகள் வெவ்வேறு வகைகளில், சிலர் துப்பாக்கிச் சூட்டினாலும், சிலர் தீக்குளித்தும், சிலர் சிறைகளிலும் உயிர் தியாகம் செய்தார்கள். மொழியின் முக்கியத்துவத்தை கூற நான் கடமைப்பட்டு உள்ளேன். விளைவுகளில், அடையாளத்தில், வரலாற்றில், சுயமரியாதையில் உண்மையை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால், அந்த மொழியை காத்து இரு மொழிக் கொள்கையை பின்பற்றி இந்தியை திணிக்க விடாமல் மறுத்ததால் நம் மாநிலத்துக்கும் மக்களுக்கு என்ன பலன் கிடைத்து உள்ளது என்று நாம் சிந்திக்க வேண்டும்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் நம் தமிழ்நாடு தனிச் சிறப்பு வாய்ந்த மாநிலமாக உள்ளது. அது கல்வி, மக்கள் நல்வாழ்வு, பொருளாதாரம் என எல்லா வகைகளிலும் சிறப்பாக உள்ளது. இந்தி பெல்டு என்று சொல்லப்படக் கூடிய உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசத்தை ஒப்பிட்டு பார்த்தால் 2 மடங்கு, 3 மடங்கு 5 மடங்கு என நாம் முன்னேறி உள்ளோம். அதற்கு காரணம் நம் சமூக நீதி, அனைவருக்கும் வாய்ப்பு, பெண்களுக்கு சம உரிமை, சமமான கல்வி, சமமான வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சமூகத்தை உருவாக்கிய திராவிட இயக்கம்தான். இவ்வாறு அவர் கூறினார்.