அதிமுக கொடியை பயன்படுத்த எனக்கு மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு தடை ஏதுமில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அதிமுக தொண்டர்கள் உரிமைமீட்புக் குழு சார்பில் திண்டுக்கல்லில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், எம்எல்ஏக்கள் மனோஜ்பாண்டின், அய்யப்பன், கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி, தேர்தல் பிரிவுச் செயலாளர் சுப்புரத்தினம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இண்டியா கூட்டணி `ஆண்டி மடம்’ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். இந்தியாவை வலிமை மிக்கதாக உருவாக்க பிரதமர் மோடி பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். வரும் மக்களவைத் தேர்தலில் அவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற கருத்து நாடு முழுவதும் வலுப்பெற்று இருக்கிறது. எனவே, பாஜக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும். எங்கள் கூட்டணியின் தலைமை பாஜகதான்.
அதிமுக கொடியை பயன்படுத்த ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனக்கு மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு தடை இல்லை. தமிழகத்தில் பழனிசாமி தலைமையில் கூட்டணி அமையாது. மக்களவைத் தேர்தலில் ஓரிடத்தில்கூட பழனிசாமி அணி வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.
ஓபிஎஸ் அணி மீது புகார்: திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்தினர். இதையடுத்து, திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்திய ஓபிஎஸ் அணியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.