ராமர் கோவில் அனைவருக்கும் பொதுவானது,. யார் வேண்டுமானாலும் பிராத்தனை செய்யலாம்: எடப்பாடி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ராமர் கோயில் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு எடப்பாடி ராமர் கோவில் அனைவருக்கும் பொதுவானது. யார் வேண்டுமானாலும் அந்த ஆலயத்திற்கு இறைவனை பிராத்தனை செய்யலாம் என்று கூறினார்.

லோக்சபா தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசிய அரசியல் களமும் பரரபரப்பில் உள்ளது. சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தேர்தல் வேலைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டன. தேசிய அளவில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவும் எனத் தெரிகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது. பாஜக தனியாக ஒரு கூட்டணியை அமைக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் பாஜகவை கழற்றிவிட்டது கழற்றிவிட்டதுதான் என்று அதிமுவின் ஜெயக்குமார் நேற்று பேட்டியின் போது திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அரசியல் பரபரப்புகளுக்கு நடுவே அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆன்மீக பயணத்திற்குச் சென்றுள்ளார். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட எடப்பாடி பழனிசாமி, தொடர்ச்சியாகக் கோயில்களுக்குச் செல்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளார். அந்த வகையில், லோக் சபா தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி ஏழுமலையானைத் தரிசிக்க நேற்று மாலை குடும்பத்துடன் திருப்பதி மலைக்குச் சென்றார். நேற்று மாலை அவர் வராஹ சாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டார். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி வராஹ சாமியைத் தரிசித்தார். பிறகு எடப்பாடி பழனிசாமி கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தார். நேற்று தரிசனத்தை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி பிறகு விஐபி விருந்தினர் மாளிகைக்குத் திரும்பினார். தொடர்ந்து இன்று காலை எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார். ஏழுமலையான் கோவிலில் இன்று நடக்கும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவையிலும் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

கோயிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராமர் அயோத்தி கோவில் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்து கூறியதாவது:-

இதற்கு ஏற்கனவே கருத்து நான் சொல்லிவிட்டேன். ராமர் கோவில் அனைவருக்கும் பொதுவானது. யார் வேண்டுமானாலும் அந்த ஆலயத்திற்கு இறைவனை பிராத்தனை செய்யலாம். அதில் எந்த முரண்பாடும் கிடையாது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது. தேர்தல் தொடர்பாக 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4 குழுக்களும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.