மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்குச் சென்ற ராஜாத்தி அம்மாளும், கனிமொழியும் பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறியதோடு விஜயகாந்த் படத்துக்கும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
விஜயகாந்த் மறைந்து 1 மாதத்திற்கு மேலாகியும் இன்னுமே அவரது இல்லம் தேடிச் சென்று பிரேமலதாவுக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். விஜயகாந்த் மறைவின் போது வெளிநாடுகளில் இருந்த பலரும் ஊர் திரும்பியதும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கோ அல்லது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கோ சென்று அஞ்சலி செலுத்தி தங்கள் மரியாதையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் விஜயகாந்த் மறைந்த தருணத்தில், மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்த தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் மும்முரமாக இருந்தார் கனிமொழி. அங்கிருந்தவாறே விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலும் அவர் குறித்த பழைய நினைவலைகளையும் கனிமொழி பகிர்ந்துகொண்டார். குறிப்பாக வேலை தேடி வரும் யாராக இருந்தாலும் கைவிடாதவர் விஜயகாந்த் என்றும் 75 பேருக்கு அவரது ஆஃபிஸில் வேலை தந்தவர் எனவும் கனிமொழி எம்.பி. புகழஞ்சலி செலுத்தினார். மேலும், தன் தாயார் ராஜாத்தி அம்மாள் மீது விஜயகாந்த் மரியாதை வைத்திருந்ததையும் அப்போது குறிப்பிட்டிருந்தார் கனிமொழி.
சென்னை, தூத்துக்குடி, டெல்லி, என பிஸியாகவே ஓடிக்கொண்டிருந்த கனிமொழி, இன்று தனது தாயார் ராஜாத்தி அம்மாளை அழைத்துக் கொண்டு சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்றார். அங்கு பிரேமலதாவை சந்தித்து தனது துயரத்தை வெளிப்படுத்திய ராஜாத்தி அம்மாள், விஜயகாந்தின் ஆரம்பக்காலங்களில் அவர் கருணாநிதியோடு எந்தளவுக்கு நட்புறவு பேணினார் என்பது குறித்தெல்லாம் பழைய நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார்.
பிரேமலதா விஜயகாந்தும் தனது கணவருக்கு என்னாச்சு, என்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டது, என்பது குறித்தெல்லாம் ராஜாத்தி அம்மாளிடமும் கனிமொழியிடமும் எடுத்துக் கூறியிருக்கிறார். இந்தச் சந்திப்பின் போது விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.