இன்னும் பல பத்து ஆண்டுகளுக்கு உங்களுடைய டார்லிங்காக இருக்க விரும்புகிறேன்: நிக்கி கல்ராணி

டார்லிங், யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நிக்கி கல்ராணி. நிக்கி கல்ராணி திரைத்துறைக்கு வந்து 10 வருடங்கள் ஆகியுள்ளது. இந்த பத்து வருட திரை பயணத்தை நினைவுக்கூறும் விதமாக நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டு இருக்கிறார் நிக்கி கல்ராணி.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தவர் நடிகை நிக்கி கல்ராணி. 1983 என்கின்ற படத்தில் கதாநாயகியாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார் இவர். இந்த திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. தனது திரைப்பயணத்தை மலையாள சினிமாவில் தொடங்கினார் நிக்கி கல்ராணி.
மலையாளம் மட்டுமல்லாது கன்னடா, தமிழ், தெலுங்கு மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் ‌ நடிகை நிக்கி கல்ராணி. தமிழ் சினிமா பொருத்தவரையில் 2015ஆம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமான இவருக்கு இந்த படத்திலேயே தமிழ் மக்கள் மத்தியில் தனி கவனம் கிடைத்தது.

டார்லிங் படத்தை தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகதநாணயம், நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, ராஜவம்சம், இடியட் என எண்ணற்ற தமிழ் படங்களில் இவர் நடித்திருக்கிறார். நடிகை நிக்கி கல்ராணி தனது நீண்ட நாள் காதலரான நடிகர் ஆதி பினிசிட்டியை கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவர்.

நிக்கி கல்ராணி அறிமுகப்படமான 1983 திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அந்த வகையில் சினிமாவில் அறிமுகமாகி பத்தாண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிக்கி நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டு இருக்கிறார்.. நிக்கி கல்ராணி பதிவிட்டு இருக்கும் பதிவில், ஆரம்பத்தில் கலந்து கொண்ட ஆடிஷன்கள் முதல் தற்போது எனது கலைக்காக நான் செலவிடும் அளவற்ற மணித்துளிகள் வரை ஒவ்வொரு நொடியும் கலைத்துறையில் என்னை சிறப்பாக்கும் படிக்கட்டுகளாகவே நான் பார்க்கிறேன்.. திறமையான பல கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் பெருமையாக இருக்கிறது..

ரசிகர்களுடன் உணர்வு பூர்வமாக தொடர்பானதிலும் மிக்க மகிழ்ச்சி.. இந்த பத்து வருடத்தை திரும்பி பார்த்தால் முழுக்க முழுக்க பாராட்டுக்களும் பாடங்களும் மறக்கவே முடியாத நினைவுகளும் பெருமையாகவும் இருக்கிறது.. இந்த பத்து வருடமும் வளர்ச்சி, நன்றி, பெருமை நிறைந்தவையாக இருந்திருக்கிறது.. இன்னும் பல பத்து ஆண்டுகளுக்கு உங்களுடைய டார்லிங்காக இருக்க விரும்புகிறேன் விரைவில் படங்களில் சந்திப்போம் என பதிவிட்டு இருக்கிறார்.