அரசியல் லாபம் பார்க்கலாம் என்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக திணிக்க முயற்சிக்கிறது. அசாம் மாநிலத்தில் நடந்தது போல சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளை உருவாக்குவதுதான் இந்த திட்டத்தின் விளைவாகும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில், எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ள பாஜக மதவெறித் திசையில் வேகம் காட்டுகிறது. அதில் ஒன்றுதான் சி.ஏ.ஏ சட்டத்தை அமலாக்குவோம் என்ற கொக்கரிப்பாகும். நாட்டை நாசக்காடாக்கும் இந்த முயற்சிகளை சிபிஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது.
சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம், அகதிகளுக்கு தஞ்சமளிப்பது என்ற பெயரில் வஞ்சகமாக கொண்டுவரப்பட்டது. உண்மையில் அது இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் ஒதுக்குவதன் மூலம் தனது நோக்கத்தை அப்பட்டமாக்கிவிட்டது. அசாம் மாநிலத்தில் நடந்தது போல சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளை உருவாக்குவதுதான் இந்த திட்டத்தின் விளைவாகும்.
அரசமைப்பு சட்டத்திற்கு நேர் விரோதமாக, குடியுரிமையில் மதத்தை புகுத்தி அதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பிரிவினைக்கு தூபமிடலாம், வெறியை கிளப்பி மோதவிட்டு அரசியல் லாபம் பார்க்கலாம் என்றுதான், ரத்தம் குடிக்கும் இந்த திட்டத்தை பாஜக திணிக்க முயற்சிக்கிறது. நாடு முழுவதும் எழுந்த கடுமையான மக்கள் போராட்டங்களும், மாநிலங்களின் எதிர்ப்பும் கண்டு பதுங்கியிருந்த பாஜக, இப்போது மீண்டும் அதே ஆயுதத்தை தூக்கிக் கொண்டு கொக்கரிப்பது நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பறிப்பதற்காகவே.
சி.பி.ஐ(எம்) இந்த திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது, அரசியல் களத்திலும், மக்கள் போராட்டக் களத்திலும் முன்னின்று இந்த சவாலை முறியடித்து வீழ்த்துவோம், தேச நலன் காக்க அனைவரும் கைகோர்ப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.