நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘விடுதலை பாகம் 1 & 2’ படங்களுக்கு பார்வையாளர்கள் எழுந்து நின்று தொடர்ந்து 5 நிமிடங்கள் கைதட்டி பாராட்டினர்.
53-வது ரோட்டர்டாம் உலகத் திரைப்பட விழா நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ரோட்டர்டாம் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜன.25 முதல் தொடங்கிய இந்த விழா வரும் பிப்.4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவிலிருந்து ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’, வெற்றிமாறன் இயக்கியுள்ள, ‘விடுதலை பாகம் 1 & 2’, கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. அண்மையில் இந்த விழாவில் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் நேற்று (ஜன.31) வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட்டன. இப்படங்களின் இறுதியில் பார்வையாளர்கள் எழுந்து நின்று தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் கைதட்டினர். மேலும் இந்த திரையிடல் நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி ஆகியோருக்கும் பார்வையாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சூரி, விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தவிர, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் அடுத்த பாகத்தின் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.