பாமக தொடங்கி 34 ஆண்டுகள் ஆகியும் ஆட்சிக்கு வரமுடியவில்லை: அன்புமணி!

“பாமக தொடங்கி 34 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இன்னும் நாம் கூட்டணி என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இது எப்போது மாறும்?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

சென்னையில் இன்று பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

ஒரு கட்சியினுடைய வெற்றியை எப்படி நிர்ணயம் செய்வது? எப்படி எடை போடுவது? சிறந்த கொள்கை, அதிகமான இளைஞர்களைக் கொண்டது, அதிகமான போராட்டங்களைச் செய்த கட்சி, தொலைநோக்கு திட்டங்கள் அதிகமாக கொண்டு கட்சி என்றால் அது பாமகதான். ஆனால், ஒரு கட்சியினுடைய வெற்றி எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது. அக்கட்சியில் உள்ள எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களை வைத்துதான் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதற்காகத்தான், நாம் அரசியல் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

மக்கள் மனதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால், ஆட்சியதிகாரம் வந்தால்தான், மக்களும், ஊடகங்களும் அப்போதுதான் முதன்மையான கட்சி என்று கூறுவார்கள். தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் 56 ஆண்டு காலம் ஆட்சி செய்து வருகின்றன. அவர்களை விட அதிக தகுதியும், திறமையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட கட்சி பாமக. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் 44 ஆண்டு காலமாக, அடித்தள மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற உழைப்பை இந்தியாவில் உள்ள வேறு எந்த தலைவர்களும் செய்தது கிடையாது.

சமீபத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு விருதுகளை அறிவித்தார்கள். அந்த அறிவிப்பு வந்தபிறகு, எனக்கு மிகப்பெரிய ஒரு வருத்தம் இருந்தது. பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்மபூஷண் போன்ற விருதுகளை எல்லாம் வழங்கினார்கள். அதிலும், பாரத ரத்னா இந்தியாவின் முதன்மை விருது அதுதான். அதை சமூக போராளி, மறைந்த பிகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு வழங்கினார்கள். தகுதியானவர், நிச்சயமாக அவருக்கு வழங்க வேண்டும். ஆனால், எனக்கு பெரிய வருத்தம். 85 வயதில், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் எவ்வளவோ சாதனைகள் செய்த, பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அந்த விருதை ஏன் வழங்கவில்லை என்ற ஓர் ஆதங்கமும் வருத்தமும் எனக்கு இருந்தது. அது நியாயமான வருத்தம்தான். கர்பூரி தாக்கூர் பிகாரின் முன்னாள் முதல்வர், முடித்திருத்தும் சமூகத்தைச் சேர்ந்தவர். பிகாரில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர். அதனால், அவருக்கு கொடுத்துள்ளனர், அதை பாராட்டுகிறோம்.

முதல்வராக இருந்து சாதனைகள் செய்வது பெரிய காரியமே கிடையாது. ஆனால், தனக்கு பதவியும், பொறுப்பும் வேண்டாம். சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ எனது கால்கள் படாது எனக்கூறி, தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் சாதனை செய்வதுதான், அதுதான் உயர்ந்த சாதனை. இந்தியாவிலேயே 6 இடஒதுக்கீடுகளைப் பெற்று தந்தவர் நம்முடைய தலைவர் ராமதாஸ்தான். திமுக தொடங்கி 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறார்கள். 1949-ல் கட்சியைத் தொடங்கி, 1967-ல் ஆட்சிக்கு வருகிறார்கள். அதிமுக தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறார்கள். 72-ல் தொடங்கி, 1977-ல் ஆட்சிக்கு வருகிறார். ஆனால், பாமக தொடங்கி 34 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இன்னும் நாம் கூட்டணி என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இது எப்போது மாறும்?. மக்களின் மனநிலை மாறிக் கொண்டிருக்கிறது, அதை அனைவரும் சேர்ந்து கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விரைவில், நடைபெறவிருக்கின்ற மக்களவைத் தேர்தல் தொடர்பான பாமகவின் நிலைப்பாட்டை அறிவிப்போம். எங்களது பல இலக்குகளில், தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதும் ஒன்று. அதன் அடிப்படையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதற்கேற்ப வியூகங்களை நாங்கள் அமைப்போம். அந்த முடிவுகளை விரைவில் நாங்கள் அறிவிப்போம்” என்றார்.

முன்னதாக மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தின் தீர்மானத்தில் கூறியுள்ளதாவது:-

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாப்பதில் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயல்பாகவே மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுவதை உறுதிசெய்கிறது. அதற்கேற்ற வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் அமைக்கப்பட்டதன் நோக்கம் ஒட்டுமொத்த இந்தியாவின் அரசு நிர்வாகம் எந்த சிக்கலும் இல்லாமல் இயங்க வேண்டும் என்பதுதான். இதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொண்டு செயல்படும் வரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

2024 மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரத்தை வழங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.