இளைஞர்களை பற்றி பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேலையின்மை பற்றி பேசவில்லை, விவசாயிகளை பற்றி பேசிய நிதியமைச்சர் விவசாயிகளின் தற்கொலை குறித்து பேசவில்லை என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இன்றைய பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-2025 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் “கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களால் நாடு பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது” என்றார். மேலும், நாட்டில் 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்நிலையில், இடைக்கால பட்ஜெட் குறித்தும், நிதி அமைச்சரின் உரை குறித்தும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ப.சிதம்பரம் பேசியதாவது:-
இளைஞர்களைப் பற்றி நிறைய பேசியுள்ள மத்திய நிதி அமைச்சர் வேலையின்மை குறித்து எதுவும் பேசவில்லை. 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் கிராமப்புறங்களில் 8.3 % நகர்புறங்களில் 13.8% பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். 25 வயதிற்கு உட்பட்ட படித்த இளைஞர்கள் 42 சதவிகிதம் பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர். 30 முதல் 34 வயது வரையிலான படித்த இளைஞர்கள் 9.8% வேலையில்லாமல் இருக்கின்றனர். ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை கூட நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் கூறவில்லை. கடந்த பத்து வருடங்களாக இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கனவுகளை உடைக்கும் வேலையைத் தான் மத்திய பாஜக அரசு செய்து வந்துள்ளது.
விவசாயிகள் பற்றி பேசிய நிதி அமைச்சர், விவசாயிகளின் தற்கொலை குறித்து ஒரு வார்த்தை கூட ஏன் பேசவில்லை? ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிலையில்லாத குறைந்தபட்ச ஆதார விலை, இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, காப்பீடு விவகாரங்களில் குளறுபடி போன்ற எந்த ஒரு விஷயம் குறித்தும் எதுவும் இந்த பட்ஜெட் உரையில் பேசவில்லை. ஜிடிபி குறித்து பேசியுள்ள நிதியமைச்சர் தனிநபர் வருமானம் குறித்து ஏன் எதுவும் பேசவில்லை. இலவச உணவு தானிய திட்டம் குறித்து பேசி உள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உலக பட்டினி தரக் குறியீட்டில் இந்தியா மோசமான நிலையில் இருப்பதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பணவீக்கம் குறித்து மேம்போக்காக குறிப்பிட்ட மத்திய நிதி அமைச்சர் உணவுப் பொருட்களின் விலை 7.7% வரை அதிகரித்திருப்பது குறித்து எதுவும் பேசவில்லை.
புதிய கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் மருத்துவமனை கல்லூரிகள் கட்டப்படும் என பேசும் நிதி அமைச்சர் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து பேசவில்லை. குறிப்பாக இந்த பணியிடங்கள் எல்லாம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு இடங்கள். கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு காலில் போட்டு நசுக்கி வருகிறது. மத்திய அரசின் அனைத்து பொருளாதாரக் கொள்கைகளும் நடவடிக்கைகளும் ஏழைகளைப் புறந்தள்ளி பணக்காரர்களுக்கு சாதகமானதாகவே இருந்து வருகிறது. நாட்டின் வெறும் பத்து சதவிகித மக்கள்தொகை கொண்ட நபர்களிடம் 60% பணம் மற்றும் வளங்கள் குவிந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2014ஆம் ஆண்டில் ஜிடிபி வளர்ச்சியை 6.4% ஆகவும் சராசரி வளர்ச்சியை 7.5% ஆகவும் வைத்து சென்றது. அதன் பிறகு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜிடிபி வளர்ச்சியை ஆறு சதவீதத்திற்கு கீழாக குறைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.