நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைப் பொறுக்காமல் எதேச்சதிகார கொடுங்கரம் கொண்டு மத்திய அரசு தாக்குதல் நடத்துவதாக என்.ஐ.ஏ. சோதனைகளுக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு கைதானவர்களுடன் தொடர்பிருப்பதான சந்தேகத்தின் பேரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் வீடுகளில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் (என்.ஐ.ஏ) அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது செல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி விசாரணைக்காக என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. என்.ஐ.ஏ.வின் இந்த திடீர் நடவடிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டும் வருகின்றன. என்.ஐ.ஏ. சோதனைக்கு தமிழர் அமைப்புகள் சில கண்டனமும் தெரிவித்துள்ளன. இந்த சோதனை குறித்து முன்னர் கருத்து தெரிவித்த சீமான், என்னிடம் இருந்துதானே விசாரணை நடத்தி இருக்க வேண்டும் என்றார். பின்னர் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், குண்டாஸ் சட்டங்களை ஏற்கனவே பார்த்தவர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இதற்கு எல்லாம் பயப்பட மாட்டார்கள் என்றார்.
என்.ஐ.ஏ. சோதனைகள் குறித்து கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நாம் தமிழர் கட்சி தேசதுரோக செயல்களில் ஈடுபட்டது. நாட்டுக்கு எதிராக செயல்பட்டவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து தற்போது சோதனை நடத்தி உள்ளனர். அடுத்ததாக கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 2024 லோக்சபா தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சியே காணாமல் போய்விடும் என்றார். இந்த பின்னணியில் தற்போது சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சீமான் கூறியிருப்பதாவது:-
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு தமது அரசியல் ஆக்கிரமிப்புக்கும், அதிகாரப் பரவலுக்கும் இடையூறாக உள்ள சனநாயக அமைப்புகள் மீது எதேச்சதிகார கொடுங்கரம் கொண்டு தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாகத் தொடர் கதையாகிவிட்டது. அந்த வகையில், மக்களாட்சி பாதையில் அறிவாயுதம் ஏந்தி தமிழ் மொழி காக்கவும், தமிழ் மண்ணின் வளங்களைக் காக்கவும், வருங்கால தமிழிளம் தலைமுறை நலத்திற்காகவும் தொடர்ச்சியாக களத்தில் நின்று போராடும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அச்சுறுத்தும் நோக்கத்தில் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு தனது கைப்பாவையான தேசிய புலனாய்வு முகமை மூலம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை என்ற பெயரில் நடத்தியுள்ள அரசியல் பழிவாங்கும் போக்கினைக் கண்டித்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழகத் தலைவர் சகோதரர் நெல்லை முபாரக் அவர்களுக்கும், மனிதநேய சனநாயக கட்சித் தலைவர் சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களுக்கும், மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி அவர்களுக்கும், தமிழ்த்தேச தன்னுரிமை கட்சித் தலைவர் ஐயா அ.வியனரசு அவர்களுக்கும் எனது அன்பினையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.